இந்தியா

கடந்த ஆண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி

Published On 2024-08-22 02:20 GMT   |   Update On 2024-08-22 02:20 GMT
  • 10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை.
  • 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.

புதுடெல்லி:

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரியங்கள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவிகளே தேர்வு எழுதியுள்ளனர்.

10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சதவீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16 சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீதமாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.

மத்தியபிரதேச மாநில வாரியத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News