மத்திய பிரதேசம்: கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் வெற்றி பெற்ற 90 எம்.எல்.ஏ.-க்கள்
- பா.ஜனதாவை சேர்ந்த 51 எம்.எல்.ஏ.-க்கள் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 38 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. பா.ஜனதா 163 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 90 எம்.எல்.ஏ.-க்கள் கிரிமினல் வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என ஜனநாயக சீரமைப்பு சங்கம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 94 ஆக இருந்த நிலையில், தற்போது அதில் நான்கு குறைந்துள்ளது.
இவர்களில் 34 பேர் அதிகபட்சமா ஐந்து ஆண்டுக்கு மேல் தண்டனை பெறும் வகையிலான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். கடந்த 2018-ல் இந்த வகையிலான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை 47 ஆக இருந்தது. தற்போது அதில் 13 எம்.எல்.ஏ.-க்கள் குறைந்துள்ளனர்.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரதம் லோதி மட்டும் கொலை வழக்கை எதிர்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொலை முயற்சி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். மூன்று பேர் மீது பெண்கள் தொடர்பான கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2018 தேர்தலில் பா.ஜனதா 109 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதிதான தேர்வு செய்யப்பட்ட 163 பேர்களில் 51 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். இதில் 16 பேர் கடுமையான தண்டனைக்குரிய குற்ற வழக்கை எதிர்கொள்கின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 38 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். 17 பேர் கடுமையான குற்றவழக்கை எதிர்கொள்கின்றனர்.
பாரத ஆதிவாசி கட்சியை ஒரு தொகுதியை பிடித்துள்ளது. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.-வும் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.