இந்தியா

ஐரோப்பிய நிறுவனம் விண்வெளியில் இருந்து எடுத்த ராமர் பாலம் புகைப்படம்

Published On 2024-06-25 06:41 GMT   |   Update On 2024-06-25 06:41 GMT
  • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவை.
  • இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

புதுடெல்லி:

தமிழகத்தின் ராமேசுவரம் அருகில் உள்ள தனுஷ் கோடியில் இருந்து இலங்கையில் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ் கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்கும் 7 முதல் 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை.

இது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புள்ளவையாக இருப்பதால் ராமர் பாலம் (ராம் சேது), ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இது ராமர் கட்டிய பாலம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

இப்பாலத்தின் கிழக்கில் சுமார் 130 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட மன்னார் தீவு உள்ளது. இது, இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் சாலை மற்றும் ரெயில் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் பாலத்தின் மேற்கில் இந்தியப் பகுதியில் ராமேஸ்வரம் தீவு உள்ளது. இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள பாம்பனில் இருந்து சாலை மற்றும் கடல் பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தனது காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பாலத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு

உள்ளது. இங்கு கடல் மிகவும் ஆழமற்றதாக அதாவது 1 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான ஆழத்தில் மட்டுமே இருப்பதால் இப்பகுதி வெளிர்நீல நிறத்தில் காணப்படுகிறது.

இங்குள்ள சுண்ணாம்பு கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன.

இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், "இந்த இயற்கை பாலம் 15-ம் நூற்றாண்டு வரை பயணிக்க கூடியதாக இருந்ததாகவும் பின்னர் புயல்களால் படிப்படியாக அது அரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது" என்றும் கூறியுள்ளது. அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராமர் பாலம் தொடங்கும் இடமாக கருதப்படும் அரிச்சல் முனை பகுதிக்கு பிரதமர் மோடி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News