அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் கியாசை திறந்து குழந்தையுடன் தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
- மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
- பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.
உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.