டெல்லி மந்திரிக்கு மசாஜ் செய்தவர் கற்பழிப்பு குற்றவாளி: புதிய தகவல்கள்
- திகார் சிறையில் டெல்லி மந்திரிக்கு மசாஜ் செய்தவர் பிசியோதெரபி நிபுணர் இல்லை.
- டிசம்பர் 4-ந்தேதி, டெல்லி மாநகராட்சி தேர்தல் நடக்கிறது.
புதுடெல்லி :
டெல்லியில் நடந்து வரும் ஆம் ஆத்மி அரசில் மந்திரியாக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். சுகாதாரத்துறை பொறுப்பு வகித்து வந்தார். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த 5 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிறப்பு சலுகைகளும், விசேஷ உணவு வகைகளும் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் 'மசாஜ்' செய்யப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அவர் படுத்தபடி முதுகு, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொள்வதும், நாற்காலியில் அமர்ந்தபடி தலைக்கு மசாஜ் எடுத்துக் கொள்வதும் இடம்பெற்றிருந்தன. இதையொட்டி, ஆம் ஆத்மியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு 'மசாஜ்' செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்தது. அவர் முதுகு தண்டுவட காயத்தால் பாதிக்கப்பட்டதால் 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியது.
இந்தநிலையில், டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு மசாஜ் செய்பவர், பிசியோதெரபி நிபுணர் அல்ல, கற்பழிப்பு குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைதாகி, திகார் சிறையில் இருக்கும் கைதி என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் பெயர் ரிங்கு.
இதைத்தொடர்ந்து, சத்யேந்தர் ஜெயினை பதவி நீக்கம் செய்யுமாறு பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கவுரவ் பட்டியா கூறியதாவது:-
புதிய தகவல் வெளியான நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மணி நேரத்தில் இதற்கு பதில் சொல்லத் தயாரா? அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்யேந்தர் ஜெயின் ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக்கூடாது. அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 4-ந் தேதி, டெல்லி மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி மந்திரி பற்றிய தகவல்கள், புயலை கிளப்பி உள்ளது.