இந்தியா

காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குங்கள்- நிதின் கட்கரி கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

Published On 2024-07-31 16:21 GMT   |   Update On 2024-07-31 16:21 GMT
  • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
  • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆதரவு

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்குச் சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

"மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய் தெரிவித்தார்.

நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News