இந்தியா

அவசரகதியில் சட்டம் கொண்டுவர முடியாது: மத்திய வேளாண் மந்திரி

Published On 2024-02-14 01:18 GMT   |   Update On 2024-02-14 01:18 GMT
  • மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது.
  • வேளாண்மை என்பது மாநில விவகாரம். மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.

இந்நிலையில், இதுகுறித்து விவசாய சங்கங்களுடன் இரண்டு சுற்று போராட்டம் நடத்திய மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம். அவற்றை நிர்வாகமட்டத்தில் செய்து விடலாம். சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டி இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கிறது.

வேளாண்மை என்பது மாநில விவகாரம். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் நாளைக்கு இதே நபர்கள், மாநிலங்களை ஆலோசிக்காமல் எப்படி சட்டம் கொண்டு வரலாம் என்று கேட்பார்கள்.

எனவே, அவசரகதியில் மத்திய அரசு சட்டம் கொண்டு வராது. என்ன மாதிரி சட்டம் கொண்டு வரலாம், அதன் சாதக, பாதகங்கள் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். அவசரகதியில் சட்டம் கொண்டு வந்தால், அது தோல்வியில் முடிந்து விடலாம்.

எனவே, முதிர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் தேதியை சொல்ல வேண்டும். அப்போது பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.

அதை விடுத்து பிரச்சினை செய்வதுதான் தங்களது குறிக்கோள் என்று விவசாயிகள் செயல்பட்டால், அவர்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். விவசாயிகளுக்கிடையே சமூக விரோதிகள் கலந்து, அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. அவர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News