இந்தியா

சபரிமலை வரும் பக்தர்கள் முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்- கேரள தேவசம்போர்டு மந்திரி பேட்டி

Published On 2024-11-12 04:56 GMT   |   Update On 2024-11-12 04:56 GMT
  • தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.
  • எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும்.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

கடந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தால் தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பியதாக கூறப்பட்டது. இதுபோன்ற நிலை வரும் சீசனில் ஏற்படாமல் இருக்க கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்கை எடுத்துள்ளன. இது தொடர்பாக கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியதாவது:-

சபரிமலை வரும் பக்தர்களுக்கு அதிகபட்ச வசதிகள் செய்து தரப்படும். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானாலும், மண்டல சீசன் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்.

ஆன்லைன் முன்பதிவு தவிர, ஆதார் அட்டையுடன் தினமும் வரும் 10 ஆயிரம் பேருக்கு கூடுதல் சேர்க்கை வழங்க 3 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யப்படும். நடைபயணமாக வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க 3 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோலி தொழிலாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க இந்த சீசனில் ப்ரீபெய்டு டோலி முறை அறிமுகப்படுத்தப்படும்.

எருமேலியில் வாகனங்களை நிறுத்த கூடுதலாக 6½ ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் இந்த சீசனில் செய்யப்படுவதால், எந்த பக்தரும் கோவிலில் தரிசனம் செய்யாமல் மனமுடைந்து திரும்ப வேண்டியதில்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முறைப்படி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அரவணை பிரசாதம் தட்டுப்பாட்டை தவிர்க்க 40 லட்சம் கண்டெய்னர்களில் இருப்பு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News