கிருஷ்ணர் மந்திரங்கள் அடங்கிய BBA-MBA பாடத்திட்டம்.. பல்கலைக்கழகத்தில் அறிமுகம்
- மாணவர்கள் கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
- அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.
அலகாபாத் பல்கலைக்கழத்தில் புதிய பட்டப்படிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கொண்ட புதிய பாடத்திட்டத்தில் BBA-MBA படிப்பை மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு படிக்க முடியும். இந்த பட்டப்படிப்பை வர்த்தக பிரிவு ஆசிரியர்கள் துவங்கி உள்ளனர்.
புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் மாணவர்கள் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் இருந்து கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கிருஷ்ணர் மட்டுமின்றி ஜெ.ஆர்.டி. டாடா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் பற்றியும் நிர்வாக ரீதியிலான பாடங்களை கற்கவுள்ளனர்.
இதோடு அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள் உள்ளன. புதிய படிப்பில் பல்வேறு வழிமுறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திக் கொண்டால் டிப்ளோமா படிப்புக்கான சான்றும், மூன்றாவது ஆண்டில் நிறுத்திக் கொண்டால், BBA பட்டமும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்தால் MBA பட்டமும் பெற முடியும்.