கேரளாவுக்கு ஒரு நாள் பயணமாக வருகை: மத்திய மந்திரி அமித்ஷா-கத்தோலிக்க பேராயர் திடீர் சந்திப்பு
- கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
- பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சில தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கொச்சி வந்தார்.
கொச்சியில் அவர் திருச்சூர் கத்தோலிக்க பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை மத்திய மந்திரி அமித்ஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதில் கேரளாவுக்கு வரும்போது மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் கத்தோலிக்கர்களை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் கத்தோலிக்கர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்பு கேரளாவில் உள்ள சில கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடி கேரளா சென்றபோது அவரை 8 ஆயர்கள் சந்தித்து பேசினார்கள். அதன்பின்பு பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த நிலையில் கேரளா வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தாழத்தை சந்தித்து பேசியிருப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.