இந்தியா

மத்திய மந்திரி அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது- உள்துறை மந்திரி அமித் ஷா

Published On 2022-10-09 17:58 GMT   |   Update On 2022-10-09 17:58 GMT
  • பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன.
  • முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.

கவுகாத்தி:

வடகிழக்கு கவுன்சிலின் 70வது கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக இணை மந்திரி பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் பல ஆண்டுகளாக மூன்று பெரிய தடைகள் இருந்தன. வன்முறை, தீவிரவாத குழுக்களால் அமைதியின்மை, ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து இணைப்பு இல்லாதது ஆகியவையே அந்த தடைகள். 


முந்தைய அரசுகள் வடகிழக்கு பகுதி வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. வடகிழக்கு வளர்ச்சிக்கு அவை ஒருபோதும் முன்னுரிமை வழங்கவில்லை ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து போக்குவரத்து இணைப்புகளையும் அதிகரிக்கவும், வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் வடகிழக்கு நிலப்பயன்பாட்டுக் கவுன்சிலின் தரவுகளை வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும். இதற்காக தங்களது மாநிலங்களில் ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News