ரேவந்த் ரெட்டி உருவப்பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய விவசாயிகள்: தெலுங்கானாவில் பரபரப்பு
- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
- அதேவேளையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின்போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறிய விவசாயிகள் ரேவந்த் ரெட்டி உருவப்பொம்மையை இறுதி ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலமடுகு மண்டலில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி போன்ற ஒரு உருவ பொம்மையை உருவாக்கி பாடையில் கிடத்தினர். அதற்கு செருப்பு மாலை அணிவித்து தெருத்தெருவாக இறுதி ஊர்வலம் போன்று எடுத்துச் சென்றனர். அப்போது முதல்வர் டவுன் டவுன் (CM down down) என கோஷமிட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டம் நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது, இறுதியாக போராட்டம் நிறைவு பெற்றது.
அரசின் செயலற்ற தன்மையால் தாங்கள் நிதிச்சுமையால் தவிக்கிறார். ஏராளமான கடன்கள், அவர்களுக்கு திருப்பி கட்டுவது மிகப்பெரிய சுமையாக உள்ளது எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே பயிர்க்கடன் தள்ளுபடிக்கான தெலுங்கான அரசு 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளதாகவும், 3-வது மற்றும் கடைசி தவணையான 5644.24 கோடி ரூபாய் வழங்க இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் குறித்த விவரங்களை கட்சி சேகரிக்கும் என பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராம ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் கடன் தள்ளுபடியைப் பெறுவதை பிஆர்எஸ் உறுதி செய்யும் என்றும் கே.டி. ராம ராவ் வலியுறுத்தினார்.