இந்தியா

மதபோதகர் ஷபீர் அகமது சித்திக்

தேர்தலில் போட்டியிட ஆண்களே இல்லையா? - பெண் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மதபோதகர்

Published On 2022-12-04 20:13 GMT   |   Update On 2022-12-04 20:13 GMT
  • குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
  • பெண்கள் தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என மதபோதகர் கூறினார்.

அகமதாபாத்:

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 1-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அகமதாபாத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஜும்மா மசூதியின் இமாம் எனப்படும் தலைமை மதபோதகர் ஷபீர் அகமது சித்திக் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீங்கள் இஸ்லாமிய மதம் குறித்து பேசுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். இஸ்லாமிய மதம் அனுமதித்தால் பெண்கள் பொதுவெளியில் அவ்வாறு (ஹிஜாப் அணியாமல்) செல்ல அவர்கள் மசூதிக்குள் வழிபாடு நடத்த செல்ல எந்த தடையும் இல்லை.

பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், இஸ்லாமிய மதத்தில் பெண்கள் சில நிலையில் உள்ளனர். ஆகையால், இஸ்லாமிய மத பெண்கள் தேர்தலில் போட்டியிட யாரேனும் சீட் கொடுத்தால் அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர்கள். ஆண்களே இல்லையா நீங்கள் ஏன் பெண்கள் தேர்தலில் போட்டிட சீட் கொடுக்கிறீர்கள்?

தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இஸ்லாமிய மதத்தை பலவீனபடுத்தும். நீங்கள் பெண்கள் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், கவுன்சிலர்களை உருவாக்கினால் என்ன ஆகும்? நாங்கள் ஹிஜாப்பை பாதுகாக்க முடியாது. மேலும், ஹிஜாப் விவகாரத்தை எழுப்ப முடியாது.

பெண்களை அரசியலில் ஈடுபடுத்தினால் ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டில் எங்கள் வாதம் பலவீனமாகும். ஏனென்றால் இஸ்லாமிய மத பெண்கள் சட்டசபை, பாராளுமன்றம், மாநகராட்சியில் அங்கம் வகிக்கின்றனர் என்று கோர்ட்டு கூறும் என தெரிவித்தார்.

ஷபீர் அகமது சித்திக்கின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல் எழுந்து வருகிறது.

Tags:    

Similar News