நாடு முழுவதும் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5ஜி சேவையை பெற வாய்ப்பு- மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
- 5ஜி தொலைத் தொடர்பு சேவையில் கதிர் வீச்சு அளவு குறைவாகவே உள்ளது.
- ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில்களை வடிவமைக்க நடவடிக்கை.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், 5ஜி சேவையின் வேகம் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.
5ஜி ஆய்வகம் சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5ஜி தொலைத் தொடர்பு சேவையின்போது வெளிப்படும் கதிர் வீச்சின் அளவு உலக சுகாதார ஆணையம் பரிந்துரைந்த அளவை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5ஜி சேவையைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஒடிசாவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் குறிபிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டிற்குள் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் ரெயில்களை வடிவமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், கதி சக்தி கொள்கையின் மூலம் நாட்டின் இணைக்கப்படாத பகுதிகளை ரெயில்வே மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.