நடைபயணத்தில் பங்கேற்கக் கூடாது என மக்களை அசாம் அரசு மிரட்டுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
- 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடைபயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது அசாம் மாநிலத்தில் நடைபயணம் செய்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்க, பா.ஜனதா மாநில அரசு மறுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில் மக்களை நடைபயணத்தில் பங்கேற்கக் கூடாது என அசாம் மாநில அரசு மிரட்டுகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் பிஸ்வாநாத் சாரியாலியில் நடைபெற்ற நடைபயணத்தின்போது மக்களிடையே ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த பாத யாத்திரை பயணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மக்களை அசாம் மாநில அரசு மிரட்டுகிறது. ஆனால், மக்கள் பா.ஜனதாவுக்கு பயப்படவில்லை.
இந்த நடைபயணத்தின்போது நாங்கள் நீண்ட நேரம் பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் 7 முதல் 8 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிரதிநிதிகளுடன் பேச வேண்டியுள்ளது. மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சனைகளை கேட்க வேண்டியுள்ளது. பின்னர், உங்களுடைய பிரச்சனைக்காக போராட வேண்டியுள்ளது. இதுதான் இந்த நடைபயணத்தின் இலக்கு.
தேர்தல் வரும்போது பா.ஜனதாவை காங்கிரஸ் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கும். மிரட்டல் இருந்த போதிலும் முன்னோக்கி சென்று மக்களுக்காக போராட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.