இந்தியா

ஆந்திராவில் தேர்தல் மோதலால் தொடர்ந்து பதற்றம்

Published On 2024-05-15 05:19 GMT   |   Update On 2024-05-15 05:19 GMT
  • தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர்.
  • அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி நேற்று பத்மாவதி பல்கலைக்கழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை பார்வையிட சென்றார்.

அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர். பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பியால் நானியை தாக்கினர்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடைய பாதுகாவலர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதால் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி சந்திரகிரி ஆகிய இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு நிலைமை மோசம் அடைந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாடிப்பட்டியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி இரு தரப்பினரையும் போலீசார் கலைத்தனர்.

இதே போல நேற்று தாடிபத்திரி தொகுதியில் இரு கட்சியினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது.

இந்த தகவல் அறிந்த இருதரப்பு ஆதரவாளர்கள் பக்கத்து கிராமங்களில் இருந்தும் தாடிபத்ரி நகரப் பகுதியில் குவிந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இந்த 3 இடங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் அமைதியாக தேர்தல் நடத்துவதில் போலீசார் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News