இந்தியா (National)

அரியானா சட்டசபை தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி - பஜ்ரங் புனியா வாழ்த்து

Published On 2024-10-08 09:55 GMT   |   Update On 2024-10-08 09:55 GMT
  • அரியானா சட்டசபை தேர்தலில் வினேஷ் போகத்திற்கு காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது.
  • தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வினேஷ் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரியானா சட்டசபை தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப் போட்டி ஒரு ஜூலானா தொகுதிக்காக மட்டும் அல்ல, கட்சிகளுக்கு இடையேயான சண்டை மட்டுமல்ல. இந்த போராட்டம் நாட்டின் பலமான அடக்குமுறை சக்திகளுக்கு எதிரானது. இதில் வினேஷ் வெற்றி பெற்றுள்ளார்" என்று பஜ்ரங் புனியா பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News