பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு - பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை
- பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
- பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் - என்.ஐ.ஏ
பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த வாரம் ஷிவமோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.