டெல்லியில் மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து நடத்தப்படும்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- அரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- அரியானா முதல்வர் மீது 302 சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
டெல்லியில் பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் "அரியானா போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்குள் புகுந்து எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எங்களுடைய டிராக்டர்களை அடித்து நொறுக்கினார்கள். அரியானா முதல்வர், அரியானாவின் உள்துறை மந்திரி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விவசாயி மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மார்ச் 14-ந்தேதி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும்" என்றார்.
போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர்.