பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்ததும் முக்கிய முடிவுகள் எடுப்பேன்-பிரதமர் மோடி
- ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
- ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் பற்றி வழக்கமாக வெளிநாடுகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் இந்த தடவை அதில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய தேர்தலை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவர்களால் இந்த விசயத்தில் வெற்றிபெற இயலாது.
இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஒருபோதும் எடுபடாது. நெருக்கடி நிலைக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக ஏழைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கி றார்கள். அவர்கள் வெளி நாட்டு சக்திகளின் சதிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.
இந்த தடவை தேர்தலில் ஜெயித்தால் நான் சர்வாதிகாரி ஆகி விடுவேன் என்று சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியை யும், அவர்களது மூதாதை யர்கள் செய்ததையும் எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்கட்டும். அவருடைய (ராகுல்காந்தி) பாட்டி என்ன செய்தார்? அவருடைய பெரிய தாத்தா என்ன செய்தார்?
மோடி கட்சியின் ஆட்சியில் என்ன செய்யப்பட்டது? இதை ஒப்பிட்டு பார்த்தால் யார் சர்வாதிகாரி என்பது தெரிந்து விடும். இதுபற்றி யாராவது விவாதிப்பது உண்டா?
அரசியல் சட்டத்தில் நேரு முதல் முதலில் பெரிய மாற்றங்கள் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது என்னவெல்லாம் நடந்தது? இப்போது எனது ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்ன நடந்தது?
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தை யும் பட்டியலிட முடியும். எனது ஆட்சியில் அத்தகைய தவறுகள் ஒன்றைகூட சுட்டிகாட்ட முடியாது. ஜன நாயகம் என்பது எங்களது ரத்த நாளங்களில் ஓடியது. எனவே சர்வாதிகாரி என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதுபோல நான் முஸ் லிம்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கி றார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி உள்ளோம்.
பா.ஜ.க. அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். ஒரு கிராமத்தில் 50 பேருக்கு வீடு தேவை என்றால் 50 பேருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். ஜாதி, மதம் பார்த்து எதுவும் நடக்காது.
அனைத்து ஜாதி, மத மக்களும் அனைத்துவிதமான திட்ட பயன்களும் பெறுவார்கள். இதுதான் சமூகநீதியின் உத்தரவாதம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டபோது நாங்கள் திட்டமிட்டு அதை ஒடுக்கினோம். அதன் பிறகு இன்று வரை மத கலவரம் ஏற்படவில்லை.
முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்தில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக கருத முடியும். முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இஸ்லாமியன ரும் இந்தியாவின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தஒரு மதத்தை சார்ந்தவரும் கொத்தடிமை போல் வாழ்வதை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். என்றா லும் சிலர் பயம் காரணமாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.
வாரணாசி தொகுதிக்கு 2014-ம் ஆண்டு சென்ற போது நான் அங்கு போட்டியிடுவது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அங்கு மனுதாக்கல் செய்து முடித்த பிறகு மக்கள் மத்தியில் பேசினேன். அப்போது நான் எனது பேச்சுக்கான குறிப்புகளை தயார் செய்திருக்கவில்லை.
வாரணாசி மக்கள் மத்தியில் பேசுகையில், `என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. கங்கை தாய் என்னை வரவழைத்து தத்து எடுத்து இருக்கிறாள்' என்று கூறினேன். அதை வாரணாசி மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நான் வாரணாசியில் தொடர்ந்து இருக்கிறேன். நான் பேசும்போதெல்லாம் எனது வாரணாசி என்று தான் குறிப்பிடுவேன். எனக்கும், வாரணாசி தொகுதிக்கும் இருக்கும் தொடர்பானது ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது.
வாரணாசி போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நான் குஜராத்தில் உள்ள வீட்டுக்கு சென்றபோது எனது தாய் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் 2 விசயங்களை என்னிடம் குறிப்பிட்டார். ஒன்று-எப்போதும் ஏழைகளுக்காக உழைத்துக் கொண்டே இரு. 2-வது எந்த காரணத்தை கொண்டும் ஊழலுக்கு இடம் கொடுக்காதே என்று கூறினார்.
இந்த இரண்டையும் நான் இப்போதும் கடை பிடித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்று வருவதை வழக்கத்தில் வைத்திருந்தேன்.
எனது தாயாரிடம் ஆசி பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது இப்போதுதான் முதல் தடவை. அதே சமயத்தில் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்கள் இருந்து என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.
அந்த ஆசியுடன் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.
2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதீய ஜனதா பெற்றது. இந்த தடவை ஆந்திரா, ஒடிசா, வடக்கு கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. எனவே 400 இடங்களை நிச்சயம் எட்டி பிடிப்போம்.
கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பாக நான் மவுனமாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
பிரஜ்வால் போன்றவர்க ளின் செயல்களை ஒருபோ தும் பொறுத்துக் கொள்ள இயலாது. என்றாலும் அவர் தொடர்பான ஆயிரக்க ணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடியோக்களை தொகுத்து உள்ளனர். தேர்தல் சமயத்தில் சதிதிட்டத்துடன் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
3-வது முறை பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அதற்கான திட்டமிடலில் நான் ஈடுபட்டுள்ளேன். தேர்தலுக்கு பிறகு நான் மிக முக்கியமான பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன். அந்த முடிவு களில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை.
ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
எனது நாடு எந்த ஒரு சிறிய விசயத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கொள்கை முடிவுகளை செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால்தான் இந்தியாவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இனி அத்தகைய நிலை இருக்காது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.