இந்தியா

பாஜக கடந்த காலத்தை பார்க்கிறது: எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்- சஞ்சய் ராவத்

Published On 2024-07-13 09:30 GMT   |   Update On 2024-07-13 09:30 GMT
  • எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்- மத்திய அரசு
  • 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் கடந்த காலத்தை பாஜக பார்க்கிறது- ராவத்

50 வருடத்திற்கு முன் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை பாஜக பார்க்கிறது. அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

எமர்ஜென்சி அறிவித்து 50 வருடங்கள் ஆகிறது. பாஜக இன்னும் கடந்த காலத்தை பார்க்கிறது. நாட்டின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி போன்ற நிலை தற்போது உள்ளது. யாரை வேண்டுமென்றாலும் பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள்.

நீதிமன்றங்கள் மீது நெருக்கடி உள்ளது. மத்திய அமைப்புகளை அரசு நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வருகிறார்கள். ஊழல், அராஜகம் அதிகரித்து வருகிறது. சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது. அந்தக் காலத்திலும் இதே நிலைதான். இந்திராஜி மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றினார்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி அறிவித்தபோது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் சிவசேனா எமர்ஜென்சியை ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News