இந்தியா (National)

மதசார்பற்ற ஜம்மு-காஷ்மீரின் முதல் சட்டமன்ற தேர்தல்: பாஜக

Published On 2024-09-13 03:48 GMT   |   Update On 2024-09-13 03:48 GMT
  • கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும்.
  • தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின், முதன்முறையாக அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மதசார்பற்ற ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும் என பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:-

இந்த சட்டமன்றத் தேர்தலில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியளிக்கும் அல்லது மரணம் மற்றும் அழிவை உறுதியளிக்கும் ஆகியவற்றில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தபோது சொந்த அரசியலமைப்பு கொண்டிருந்தது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு தற்போது ஒருங்கிணைந்த அரசியலமைப்பு உள்ளது.

மதசார்பற்றதாக மாறிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். ஒரே கொடியுடனும், கல் எறிதல் சம்பவம், ஐ.எஸ்.ஐஎஸ், பாகிஸ்தான் கொடிகள், கடையடிப்பு இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாகும். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான். யாசின் மாலிக், ஆசியா அந்த்ராபி அல்லது ஷபீர் ஷாவை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கம் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் தனிப்பட்ட நபர்களை சந்தித்தார். அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என கருதுபவர்கள். இது இந்திய பாராளுமன்ற தீர்மானத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தை மட்டுமு் இழிவுப்படுத்த வில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்றும்போது பாராளுமன்றத்தில் இருந்த அவர்களுடைய முன்னோர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு சுதான்சு திரிவேதி தெரிவித்தார்.

Tags:    

Similar News