மம்தாவை குற்றம்சாட்டுபவர்கள் விரல்கள் உடைக்கப்படும்: திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பேச்சால் சர்ச்சை
- மாணவர்கள் நீதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- அரசு இயந்திரம் செயல்படவில்லை எனக் கூறி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.
மேற்குவங்கம் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது. டாக்டர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வற்புறுத்தி வருகிறார்.
இதற்கிடையே மம்தா பானர்ஜி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி உதயன் குஹா பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பேசிய வீடியோதானா? என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியவில்லை.
அந்த வீடியோவில் "மம்தாவை நோக்கி விரல்களை காட்டி குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இது ஒருபோதும் வெற்றியடையாது. மம்தா நோக்கி யார் விரல் நீட்டுகிறார்களோ? அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும்" என பேசியுள்ளார்.
டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி ஒரு கும்பல் திடீரென மருத்துவமனையின் எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். அசாதாரண நிலை ஏற்பட்ட போதிலும் போலீசார் தடியடி நடத்திவில்லை.
"வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் வன்முறை நடைபெற்றது. இன்னொரு வங்கதேசம் போன்று திரும்ப நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த போராட்டத்தை சாக்குபோக்காக வைத்து வீட்டிற்கு செல்ல அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவிட பயன்படுத்தி அதனால் ஒரு நோயாளி இறந்தால், ஸ்டிரைக் காரணமாக மக்கள் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அப்போது நாங்கள் உதவமாட்டோம் என அவர் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது.