காதலை 'பிரேக் அப்' செய்வதை தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது - உச்சநீதிமன்றம்
- கர்நாடக உயர்நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹ 25,000 அபராதமும் விதித்தது.
- முறிந்த உறவுகள், உணர்ச்சி ரீதியாக துன்பத்தை ஏற்பத்தும் என்றாலும் கிரிமினல் குற்றம் ஆகாது
காதல் முறிவு தற்கொலைக்குத் தூண்டும் குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் 8 ஆண்டுகளாகக் காதலித்த பின் திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் கடந்த ஆகஸ்ட் 2007-ல் 21 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்.
எனவே காதலித்து ஏமாற்றிய நபர் மீது பெண்ணின் தாய் புகார் அளித்தார். இதன்பேரில் அவர் மீது ஐபிசி 417 (ஏமாற்றுதல்), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 376 (பாலியல் பலாத்காரம்) ஆகிய பிரிவுகளின்கீழ் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கவில்லை. எனவே அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி பெண்ணை ஏமாற்றி தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி காதலனுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹ 25,000 அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து தண்டனை பெற்ற காதலன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். எனவே இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று [வெள்ளிக்கிழமை] விசாரணைக்கு வந்துள்ளது.
நீதிபதி மிட்டல், வழக்கு தொடர்பாக முந்தைய அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், காதலர்களுக்கு இடையே உடல் ரீதியான உறவு இருந்ததாகவும் குற்றச்சாட்டு இல்லை, மேலும் தற்கொலைக்குத் தூண்ட வேண்டுமென்றே எந்த செயலும் இல்லை தெரிவித்தார்.
முறிந்த உறவுகள், உணர்ச்சி ரீதியாக துன்பத்தை ஏற்பத்தும் என்றாலும், தற்கொலைக்குத் தூண்டிவிடும் அளவுக்கு கிரிமினல் குற்றத்திற்கு வழிவகுக்காது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் தற்கொலை, சமூகம் மற்றும் குடும்ப உறவில் காணப்படும் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் மன ரீதியான துன்பத்தின் பாற்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் மனநிலையை பொறுத்தது என்று நீதிமன்றம் கருதுகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக ஆதாரம் இல்லாதபட்சத்தில் சட்டப்பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) இன் கீழ் தண்டனை வழங்க முடியாது என்று கூறி கர்நாடக உயர்நீதிமன்றம் பெண்ணின் காதலனுக்கு வழங்கிய 5 ஆண்டு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.