பாஜக எம்எல்ஏ-க்களுக்கு வலைவிரிப்பு?: முக்கியத்துவம் பெறும் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பதிவு
- பதவிக்காக உ.பி. பாஜகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
- யோகி ஆதித்யநாத்- துணை முதல்வர் மவுரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக கேஷவ் பிரசாத் மவுரியா இருந்து வருகிறார். இவர் "அரசை விட கட்சி பெரியது" எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பதவிக்காக உள்கட்சி சண்டை நடைபெற்று வருவதாகவும் அகிலேஷ் யாதவ் நேற்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேஷவ் பிரசாத் யாதவ் "சமாஜ்வாடி கட்சியால் கம்பேக் கொடுக்க (மீண்டும் ஆட்சிக்கு வர) முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசு மற்றும் அமைப்பை பாஜக வலுவாக கொண்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் மழைக்கால சலுகை: 100 கொண்டு வாருங்கள். ஆட்சி அமைக்கவும் (Monsoon offer: Bring hundred, form government) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான விளக்கம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் "2022 உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. அதிருப்தியில் உள்ள 100 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நாங்கள் பெற்றால் அதன்பின் நாங்கள் எளிதாக ஆட்சி அமைக்க முடியும்" என விளக்கம் அளித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தின் தலையீட்டை விரும்பாத பெரும்பாலான பாஜக எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை இழுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் இதை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி மேலிடம் பல மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையேதான் உள்கட்சி சண்டை தலைதூக்கியுள்ளதாக கருதப்படுகிறது.