null
சகோதர பாசம்... அணிலுக்கு ஆரத்தி எடுக்கும் இளம்பெண்- வீடியோ
- மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் 'பாய் தூஜ்' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- அணில் மீது அரிசி மற்றும் பூக்கள், தானியங்களை தூவி வாழ்த்துகிறார்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரத்தி எடுப்பார்கள். பார்வை படும் என்று சுற்றிப்போடுவார்கள். குழந்தைகளின் நலன் சார்ந்த சடங்காக இதை பலரும் செய்வது உண்டு.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் 'பாய் தூஜ்' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் இந்த பண்டிகை நாளில் தங்கள் அன்புக்குரிய சகோதரரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்வார்கள். தீபாவளியைத் தொடர்ந்து 5 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த விழாவையொட்டி ஒரு இளம்பெண் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான அணிலுக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்யும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
தனது அணிலுக்காக (கில்லு) தனி வலைத்தள பக்கத்தை நடத்தும் அவர், "பாய் தூஜ் சிறப்பு பதிப்பு" என்று வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் பூஜையில் ஈடுபடும் அந்த பெண், தனது அணிலுக்கு ஆரத்தி எடுக்கிறார். அப்போது அணில் ஆரத்தி தட்டு சுற்றும் திசையில் தலையை அசைக்கிறது. பின்னர் அணிலுக்கு திலகமிட முயல்கிறார் அவர். அப்போது அவர் உணவளிக்க வருகிறார் என நினைத்த அணில் தலையை உயர்த்துகிறது. அந்த பெண் அணிலுக்கு திலகம் வைத்துவிட்டு, அணில் மீது அரிசி மற்றும் பூக்கள், தானியங்களை தூவி வாழ்த்துகிறார்.
சகோதர பாசத்துடன் அவர் அணிலுக்கு பூஜை செய்வது இணையவாசிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்தது. 2 நாட்களில் 22 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடியோவை ரசித்து உள்ளனர். பலரும் பாராட்டி கருத்துகளை பதிவிட்டனர்.