இந்தியா

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2024-11-07 03:30 GMT   |   Update On 2024-11-07 03:30 GMT
  • சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
  • விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.

மும்பை:

மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான்கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவரிடம் ரூ.5 கோடி கேட்டு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மும்பை போக்குவரத்து போலீஸ் உதவி எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், "சல்மான்கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் அவர் எங்களது பிஷ்னோய் சமுதாய கோவிலுக்கு சென்று பொதுமன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி தரவேண்டும். இதை செய்ய தவறினால், நாங்கள் அவரை கொலை செய்வோம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுபற்றி மும்பை ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மிரட்டல் குறுந்தகவல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹாவேரிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு வசித்து வந்த ஜல்ராம் பிஷ்னோய்(வயது35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் தான் மிரட்டல் விடுத்தது உறுதியானது.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மும்பை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஜல்ராம் பிஷ்னோயின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News