இந்தியா

100 நாள் வேலை திட்டத்திற்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

Published On 2024-07-23 14:31 GMT   |   Update On 2024-07-23 14:45 GMT
  • 2023-24 பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
  • ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டு செலவினம் 86 ஆயிரம் கோடி ரூபாய்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ஊரக வளர்சித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1,77,566.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 12 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1,57,545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் செலவு 1,71,069.46 ஆக இருந்தது. தற்போது அதைவிட 3.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டத்திற்காக 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 43 சதவீதம் அதிகமாகும். கடந்த பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

எனினும் கடந்த ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மொத்தமாக 86 ஆயிரம் கோடி ரூபாய் செலவு என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதே தொகையை ஒதுக்கியுள்ளது.

2022-23 நிதியாண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 90,805 கோடி ரூபாய் செலவினம் பட்ஜெட் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை உத்தரவாதம் என்பதை இந்த திட்டம் வழங்குகிறது.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டம் மூலம் மேலும் இரண்டு கோடி வீடுகள் ஊரகப் பகுதியில் கட்ட 54,500.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் 54,487 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

Tags:    

Similar News