இந்தியா

டாடா டிரஸ்ட் தலைவரான நோயல் டாடாவால் டாடா சன்ஸ் தலைவராக முடியுமா?

Published On 2024-10-17 13:07 GMT   |   Update On 2024-10-17 13:07 GMT
  • டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்பட்டது.

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

இந்நிலையில், நோயல் டாடாவால் ஒரேநேரத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்க முடியாது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் டாடா அறக்கட்டளை அல்லது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மட்டும் தான் இருக்க முடியும்.

டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு வர நோயல் டாடா விரும்பினார். ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.

இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவராக டிசிஎஸ் சிஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனை ரத்தன் டாடா நியமித்தார்.

ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோரபஜி டாடா அறக்கட்டளை ஆகியவை முக்கிய அறக்கட்டளைகள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் டி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது.

Tags:    

Similar News