மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது: வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
- கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
- எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும் என்றும் கூறி கே.கே. ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.