தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
- அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளது.
- நீர் திறப்பு தொடர்பான முடிவுகள் எடுக்க ஜூலை 25-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும்- கர்நாடகா
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் இந்த மாதம் முழுவதும் (நாளை முதல் ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் ஜூலை 25-ந்தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் போதுமான நீரை திறந்துவிடவில்லை. தற்போது அணைகளில் போதுமான அளவு நீர் உள்ளது. நீர்வரத்தும் போதுமான அளவு உள்ளது. இதனால் நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.