இந்தியா

குடியுரிமை திருத்த சட்ட விதிகள் மார்ச் மாதம் அமலுக்கு வர வாய்ப்பு

Published On 2024-02-28 06:01 GMT   |   Update On 2024-02-28 06:01 GMT
  • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
  • பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுடெல்லி:

2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதனால் குடியுரிமை திருத்த சட்ட விதிகள் அடுத்த மாதம் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்ட விதிகள் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் முன்பு வெளியிடப்படும். ஆனால் தேதியை என்னால் சொல்ல முடியாது" என்றார்.

விதிகள் வெளியிட்டவுடன் மேற்கண்ட மதத்தினருக்கு மத்திய அரசு இந்திய குடியுரிமையை வழங்க தொடங்கிவிடும். இதற்காக பதிவு செய்ய ஒரு இணைய தளத்தை மத்திய அரசு உருவாக்கி தயார் நிலையில் இருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவதை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனால் அதை அமல்படுத்த உறுதியாக இருக்கிறது.

Tags:    

Similar News