காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிறைந்து இருக்கிறது- பிரதமர் மோடி
- முதலில் தேசம் என்ற இந்த உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
- கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
மும்பை:
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் துலே மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இன்று 2-வது நாளாக பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் விதர்பா மாவட்டம் அகோலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நவம்பர் 9-ந்தேதி நாட்டின் வரலாற்றுமிக்க நாள். 2019-ம் ஆண்டு இந்த நாளில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு, எல்லா மதத்தினரும் மிகுந்த உணர்ச்சியைக் காட்டினர். முதலில் தேசம் என்ற இந்த உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
நான் பிரதமராக பதவி ஏற்ற முதல் 2 முறை மராட்டியத்தில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டி வழங்கியுள்ளேன். நீங்கள் மற்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கும் போது, இன்னும் ஒரு குடும்பம் தற்காலிக வீடு அல்லது குடிசையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டால், அவர்களது பெயரையும் முகவரியையும் எனக்கு அனுப்புங்கள். எனது சார்பாக அவருக்கு நிரந்தர வீடு உறுதி செய்யப்படும். நீங்கள் அவருக்கு வாக்குறுதி அளியுங்கள். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன்.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஊழல் நிறைந்தது. காங்கிரஸ் எங்கு ஆட்சி அமைத்தாலும், அந்த மாநிலம் காங்கிரசின் அரச குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாறுகிறது.
இமாச்சலபிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை அவற்றின் ஏ.டி.எம்.களாகமாறிவிட்டன. மராட்டியத்தில் தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவர்கள் கொள்ளையடிப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி என்றால் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் ஊழல் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.