கையில் தேசிய கொடியுடன் ஷூவை கழற்றிவிட்ட உதவியாளர்.. புது சர்ச்சையில் சித்தராமையா - வீடியோ
- காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் சித்தராமையாவின் காலணிகளை கழற்றினார்.
- காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட சித்தராமையா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டின. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த முதலமைச்சர் சித்தராமையா வந்திருந்தார். காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் முன் தனது காலணியை கழற்ற சித்தராமையான ஆயத்தமானார். அப்போது, கையில் தேசிய கொடி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் சித்தராமையாவின் காலணிகளை கழற்றி விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சித்தராமையா காந்தியடிகளை அவமதித்தார் என்று எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.