எதிர்ப்புக்கு பணிந்த மணிப்பூர்- ஈஸ்டர் ஞாயிறு அன்று விடுமுறை அறிவிப்பு
- இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.