2023ல் டெல்லியின் தனிநபர் வருமானம் 14 சதவீதம் உயர்வு- இந்தியாவிலேயே இங்கு அதிகம்
- டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது.
- 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது.
டெல்லியில் தனிநபர் வருமானம் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து ரூ.4,44,768 ஆக உயர்ந்துள்ளது. இது, 2023ம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில் மிக அதிகமாகும் என டெல்லி அரசு வெளியிட்ட புள்ளி விவர கையேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வளர்ச்சியின் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணிகள் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத இடங்களை முறைப்படுத்துதல் போன்றவை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு, பொதுச் சேவைத் துறையை, குறிப்பாக போக்குவரத்து, மின்சாரம், நீர் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் மேம்படுத்தியுள்ளதாகக் கூறியதுடன், தினசரி 4.1 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் 1,300 மின்சார பேருந்துகளைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக டெல்லி திகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது. 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது.
மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள், முதியவர்கள் மற்றும் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கி ஆதரவளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.