இந்தியா

பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-10-12 15:31 GMT   |   Update On 2022-10-12 15:31 GMT
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என ப.சிதம்பரம் வாதிட்டார்.
  • அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு தரப்பு வாதம்

புதுடெல்லி:

நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பண மதிப்பு இழப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்கியது.

முன்னாள் நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், வாதாடும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தின் தனிச் சட்டம் தேவை என்றார். இதேபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை 1978ல் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார். மேலும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பணமதிப்பு நீக்கத்திற்கான பரிந்துரைகள் மற்றம் அதுதொடர்பான உண்மைகள் மற்றும் ஆராய்ச்சியுடன் வெளிவந்திருக்க வேண்டும், அரசாங்கம் அதை பரிசீலித்திருக்க வேண்டும், ஆனால் அது இங்கே தலைகீழாக இருந்தது எனவும் ப.சிதம்பரம் வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் பேசும்போது 'தனிநபர் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை நிர்வாக ரீதியில் சரி செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்' என்று வாதிட்டார்.

பின்னர் பேசிய நீதிபதிகள், அரசியல் சாசன அமர்வு முன் வழக்கு வரும்போது, விசாரித்து பதில் அளிப்பது கடமை என்று கூறினர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை தொடரும் என கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விரிவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேணடும் என்றும் உத்தரவிட்டனர். 

Tags:    

Similar News