அதிருப்தி அணியினர் சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகின்றனர்: உத்தவ் தாக்கரே
- அதிருப்தி அணி பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர்.
- எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது.
மும்பை :
மும்பை சிவ்ரி பகுதியில் சிவசேனா சாக்கா அலுவலகத்தை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். அப்போது அவர் கட்சியினர் இடையே பேசியதாவது:-
சேனாவால் வணங்கப்பட்டு வந்தவர்கள், தற்போது பா.ஜனதா ஆதரவுடன் கட்சியை உடைத்து உள்ளனர். பா.ஜனதா ஆதரவுடன் அதிருப்தி அணியினர் உள்ள போதிலும், அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இதற்கு முன் பல முறை சிவசேனாவை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது அவர்கள் சிவசேனாவை அழிக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்களின் (அதிருப்தி அணி) பின்னால் பலம்வாய்ந்த சக்தி இருப்பதாக கூறுகின்றனர். அதிருப்தி அணியினர் யாரின் கைப்பாவையாக உள்ளார்களோ அவர்கள் சிவசேனாவை அழிக்க விரும்புகின்றனர். மும்பையில் நமது காவி கொடியை அழித்துவிட்டு, அவர்களின் சொந்த கொடியை பறக்கவிட விரும்புகின்றனர்.
பல வல்லுநர்கள் துரோகிகள் வேறு கட்சியில் சேருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என கூறுகின்றனர். ஒரு கட்சி அவர்களை தங்களுடன் சேர அழைப்பும் விடுத்தது. அவர்கள் சேனாவை அழிக்க விரும்புகின்றனர். ஆனாலும் சிவசேனா இருக்கிறது. தாக்கரேவின் தொடர்பும் சேனாவுடன் இருக்கிறது.
எத்தனை தலைமுறை ஆனாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சிவசேனா- தாக்கரே உறவை முறிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்த கூடாது. நீங்கள் எனது கட்சியை திருட விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு கொள்ளையர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் ராஜ் தாக்கரே அதிருப்தி அணியினர் என்னை அணுகினால் அவர்களை நவநிர்மாண் சேனாவில் இணைத்து கொள்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.