2023 டெல்லி மாணவர் சங்க தேர்தல்.. ஏ.பி.வி.பி. வெற்றி
- டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
- டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவு செப். 22-ம் தேதி நடந்தது.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார்.
செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலின் வாக்குப் பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் தங்களது வாக்கை செலுத்தினர்.
இந்த தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் என நான்கு பதவிகளுக்கான போட்டி நடைபெறும். பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த 24 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஏ.), இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். டெல்லி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.