பண பரிவர்த்தனை மோசடி வழக்கு: மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
- வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக ஆஜராக மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பியது.
- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார்.
பாராளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.
பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.
இதற்கிடையே, வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் 19-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மஹுவா மொய்த்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.