கேரளாவில் காங்கிரசை பலப்படுத்த மாணி பிரிவை சேர்க்க முயற்சி- தலைவர்கள் தீவிர ஆலோசனை
- மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர்.
- சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர்.
திருவனந்தபுரம்:
கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அனைத்து மாநிலத்திலும் கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.
இதில் முதல் கட்டமாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமான நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் முன்பு கூட்டணியில் இருந்த கேரளா காங்கிரஸ் (மாணி பிரிவு) கட்சியை மீண்டும் தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. இதனாலேயே அவர்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர். இதனை கருத்தில் கொண்டும் தான் காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.