ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி.. அஜித் பவார் டெல்லி விஜயம் - 10 நாளாக தொடரும் குழப்பம்
- கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஷிண்டே சத்தாரா மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
- நாளை மகா. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இடம்பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணி 288க்கு 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் கடந்த நவம்பர் 23 ஆம் தேதியே வெளியான நிலையில் 10 நாட்கள் ஆகியும் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
முதல்வர் பதவிக்கு ஷிண்டே - பாஜகவின் பட்னாவிஸ் இடையே போட்டி நிலவியது. ஷிண்டே விட்டுக்கொடுப்பதாக அறிவித்த நிலையிலும் அமைச்சரவை பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. மகராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் ஷிண்டே காபந்து முதல்வராக நீடிக்கிறார். ஷிண்டே - பட்னாவிஸ் - அஜித் பவார் மூவரும் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து அனைத்தும் சுமூகமான அமைந்தது என கூறினர்.
ஆனால் அவர்கள் மும்பை திரும்பியதுமே முக்கிய முடிவுகளை எடுக்க இருந்த மீட்டிங்கை நட்டாற்றில் விட்டுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஷிண்டே சத்தாரா மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்தார்.
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஷிண்டே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தானேவில் உள்ள ஜூபிட்டர் மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாளை மறுநாள் [டிசம்பர் 5] பதவியேற்பு என பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார் எனினும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் ரகசியமாகவே உள்ளன. நாளை மகா. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே அஜித் பவார் டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். காலாவதியான சட்டமன்றத்துடன் 10 நாட்களாக மகாராஷ்டிரா இருந்து வருவது அவமானம் என்றும் இன்னும் ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவில்லை என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்ததில் மாகாராஷ்டிர அரசியலில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற குழப்பமான சூழலே நிலவி வருகிறது.