தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் கேட்கும் சிசோடியா: சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- பிப்ரவரி 28-ந்தேதி தனது டெல்லி மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியோ மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கிடைக்காமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சிசோடியா, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி மணிஷ் சிசோடியாவின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.
மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ எஃப்.ஐ.ஆர்.யை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரை மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.