அரசு கோரிக்கையை ஏற்றதால் போராட்டம் வாபஸ் - அரியானா விவசாயிகள் மகிழ்ச்சி
- அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார்.
- விவசாயிகள் கோரிக்கை அரியானா அரசு ஏற்றதால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் உள்ளார். அந்த மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இதற்கு மறுத்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதார விலையில் சூரியகாந்தி விதைகளை வாங்க மறுக்கும் அரியானா அரசின் முடிவை கண்டித்து, குருக்ஷேத்திரத்தில் டெல்லி-அம்ரித்சர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்ல வைப்பதற்கு காவல்துறை தடியடியும், தண்ணீர் பீரங்கியும் பயன்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் மற்ற பல மாவட்டங்களில் சாலைகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதமாக சோனிபட், கோஹனா மற்றும் ரோஹ்டக் நகரங்களிலும் பல விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விவசாயிகள் கோரிக்கை அரியானா அரசு ஏற்றது. இதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர். அரசு கோரிக்கையை ஏற்றதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.