கேரளா வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.
- பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.
இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பாலத்தின் முடிவு பகுதியில் 11 மீட்டர் நீளம் மற்றும் 7 மீட்டர் அகலத்தில் பார்வையாளர்கள் நின்று கடல் அழகு மற்றும் அலையை ரசிக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், வர்க்கலா நகராட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தை கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திறந்துவைத்தார்.
இந்த மிதக்கும் பாலத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் செல்ல முடியும். தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் நடந்து சென்று ரசிக்கலாம். இந்த பாலம் மொத்தம் 1,400 உயர் ரக பிளாஸ்டிக் தொகுதிகளை இணைத்து கட்டப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.
மிதக்கும் பாலத்தின் நுழைவு கட்டணம் ரூ120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் 20 நிமிடங்கள் பாலத்தில் நேரத்தை செலவிடலாம்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகள், பாதுகாப்பு படகுகள் மட்டுமின்றி உயிர்காக்கும் காவலர்கள், மீனவர்கள் தயார் நிலையில் பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.