கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.
- இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் உம்மன் சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், உம்மன் சாண்டியை அவரது மனைவி, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் கேரளாவில் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை உம்மன் சாண்டி தற்போது மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக, உம்மன் சாண்டி மகன் பேஸ்புக் மூலம் கூறுகையில், அப்பா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தைக்கு சிறிதளவு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.