கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமினில் வந்தவர்களுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு.. அதிர்ச்சி
- நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
- இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு இந்து அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை வழக்கில் சிக்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தனர். இருவருக்கும் பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமின் கிடைத்த நிலையில், இருவரும் கடந்த 11 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து சொந்த ஊரான விஜயபுராவுக்கு சென்ற பரசுராம் மற்றும் மனோகர் ஆகிய இருவருக்கும் உள்ளூர் வாசிகளான இந்து அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சிறையில் இருந்து ஜாமின் பெற்று வந்த இருவரை இந்து அமைப்பினர் சத்ரபதி சிவாஜி சிலை அருகே அழைத்து சென்று இருவருக்கும் மாலை அணிவித்தனர். அதன்பிறகு அருகில் அருந்த கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள இருவருக்கு உள்ளூரில் இந்து அமைப்பினர் வரவேற்பு கொடுத்த சம்பவம் முகம் சுளிக்க செய்தது.