இந்தியா

பிரமோத் சாவந்த்    மைக்கேல் லோபோ 

காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு இடம் மாறிய எம்எல்ஏக்கள்- கோவா அரசியலில் பரபரப்பு

Published On 2022-07-10 23:09 GMT   |   Update On 2022-07-10 23:09 GMT
  • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
  • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News