இந்தியா

ஹத்ராஸ் செல்லும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

Published On 2024-07-04 15:11 GMT   |   Update On 2024-07-04 15:19 GMT
  • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் இன்று கைதுசெய்தனர்.
  • முக்கிய குற்றவாளியைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மூத்த சேவகரான தேவ்பிரகாஷ் மதுகருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அலிகார் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹத்ராசில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடுவார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News