இந்தியா

செல்போனில் பேசியபோது "வெடிகுண்டு" என சொன்னதால் பயணி கைது: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

Published On 2023-06-09 02:15 GMT   |   Update On 2023-06-09 02:15 GMT
  • விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.
  • வெடிகுண்டு என நினைத்து தேங்காய் கொண்டு செல்ல சிஐஎஸ்எப் அனுமதிக்கவில்லை என பயணி பேசியிருக்கிறார்

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால்  செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, "வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்" என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News